ஈரானில் ஒரே வருடத்தில் 56 பேருக்கு மரண தண்டனை ; ஐ.நா. வெளியிட்ட தகவல்
2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல், ஈரானில் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஈரானில் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் வோல்கர் டுர்க் தெரிவித்துள்ளார்.

இந்தத் தரவுகளின்படி, கடந்த டிசம்பர் முதல் ஜனவரி மாதம் வரையில் ஈரான் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் கைதான 27 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் விதிக்கப்படும் இந்த மரண தண்டனைகள் அனைத்தும் சர்வதேச அளவில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.
இந்த மரண தண்டனைகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவும், அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒடுக்கவும் பயன்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், 100-க்கும் அதிகமானோர் மரண தண்டனை நிறைவேற்றப்படும் அபாயத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஈரானிய அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை அரசுப்படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியும், தாக்குதல் நடத்தியும் ஒடுக்கினர். இதனால், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.
இத்துடன், ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் வெளியிட்ட தகவலில் அரசுக்கு எதிராகப் போராடிய 26 பேருக்கும், அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் 26 பேருக்கும் ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.