சில்லறை வணிகத் திருட்டு: 2 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்டோர் கைது
கனடாவின் டொராண்டோ நகரில் சில்லறை வணிக நிறுவனங்களில் இடம்பெறும் திட்டமிட்ட திருட்டுகளைத் தடுப்பதற்காகத் தனியாகத் தொடங்கப்பட்ட 'திட்டமிட்ட சில்லறை குற்றப் பிரிவு' கடந்த இரண்டு ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளதாகத் டொராண்டோ பொலிஸார் அறிவித்துள்ளனர்.
டொராண்டோ பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், 23ஆம் பிரிவின் கீழ் இயங்கும் இந்த சிறப்புப் பிரிவின் பொறுப்பு அதிகாரியான ரோன் இது தொடர்பான விவரங்களை வெளியிட்டார்.
இச்சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீது 4,000க்கும் அதிகமான வழக்குகள்/குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த விசாரணைகளில் திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 1.6 மில்லியன் டொலர்கள் ஆகும். ஒரேயொரு தனிப்பட்ட விசாரணையில் மட்டும் 20 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது 400க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதில் ஈடுபட்டுள்ள பலரும் முதல்முறை குற்றம் செய்தவர்கள் அல்ல; தொடர் குற்றங்களில் ஈடுபடும் நபர்களே இதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இத்தகைய நபர்கள், திருடப்பட்ட பொருட்களை விநியோகிக்கும் மற்றும் மறுவிற்பனை செய்யும் பெரிய அளவிலான திட்டமிட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்பில் உள்ளனர்.
அதனால் தான் இக்குற்றங்களை ஒடுக்குவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பின் போது பொலிஸாரால் வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில், முகமூடி அணிந்த நபர்கள் சிலர் பெரிய பைகள் மற்றும் சூட்கேஸ்களுடன் டொராண்டோவிலுள்ள மதுபானக் கடைக்குள் நுழைந்து, பொருட்களை அள்ளிக் கொண்டு எவ்வித தடையுமின்றி வெளியேறுவது பதிவாகியிருந்தது. அவர்கள் அனைவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக டேவர்னர் உறுதிப்படுத்தினார்.
சில்லறை வணிகங்களில் நடைபெறும் இத்தகைய திருட்டுகள் சிறிய குற்றங்கள் அல்ல எனவும், இதன் மூலம் வர்த்தக நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் பில்லியன் கணக்கில் இழப்பு ஏற்படுவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.