பிரிட்டிஷ் கொலம்பியாவில் பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தெற்கு உள் பகுதியில் வேகமாகப் பரவி வரும் 'பியர் லேக்' காட்டுத்தீயினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விரைவு மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் வீடுகளை இழந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாகத் தகவல்கள் தெரிவிக்கப்படவுள்ளன.
தோம்ப்சன் நிகோலா பிராந்திய மாவட்டம் வழங்கிய தகவலின்படி, சுமார் 1,100 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு பரவியுள்ள இந்த பிரம்மாண்ட காட்டுத்தீயினால், அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட சுமார் 120 சொத்துக்களிலுள்ள கட்டடங்கள் முற்றிலுமாக அழிந்துள்ளன.

பிக் பார் லேக், சாசம், கிளண்டன் பகுதியின் தெற்கே அமைந்துள்ள நெடுஞ்சாலை 97 மற்றும் கெல்லி லேக் வீதி ஆகியவற்றில் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட 120 சொத்துக்களில் பெரும்பாலானவை குடியிருப்பு வீடுகளாகும். சில இடங்களில் முதன்மை வீடுகள் தப்பியிருந்தாலும், அவற்றின் கேரேஜ்கள், கொட்டகைகள் மற்றும் ஏனைய வெளிப்புறக் கட்டடங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
இந்த கணக்கெடுப்பில் தோம்ப்சன் நிகோலா பிராந்திய மாவட்டத்தின் அதிகார வரம்பிற்கு வெளியே உள்ள கிளண்டன் நகர்ப்பகுதிச் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
காட்டுத்தீயினால் மேலும் பல கட்டடங்கள் சேதமடைந்திருக்கலாம் என நாங்கள் நம்பும் அனைத்து பகுதிகளுக்கும் இன்னும் எங்களால் செல்ல முடியவில்லை என தோம்ப்சன் நிகோலா பிராந்திய மாவட்டத்தின் தகவல் அதிகாரி கோல்டன் டேவிஸ்தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் பாதுகாப்பு நிலைமைகள் சரியாகும் போது, முழுமையான சேத மதிப்பீட்டை மேற்கொண்டு தெளிவான தகவலக்ள பெறத் திட்டமிட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
வார இறுதியில் வீசிய பலத்த காற்றினால் காட்டுத்தீயின் வீரியம் அதிகரித்திருந்த போதிலும், தற்போது வானிலை சற்றே சீரடைந்துள்ளது.