கனடாவின் மல்மூரில் இடம்பெற்ற வீதி விபத்து: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி!
கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள மல்மூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹைவே 89 மற்றும் 3ஆவது வீதி சந்திப்பில் இரு வாகனங்கள் மோதிக்கொண்டதாகப் பிற்பகல் 2:30 மணியளவில் அவசர உதவிப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
குறித்த சந்திப்பில் மோட்டார் சைக்கிள் ஒன்று பயணிகள் காரொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வெலிங்டன் நோர்த் பகுதியைச் சேர்ந்த 63 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
காரில் பயணித்த ஓட்டுநரும் பயணியும் லேசான காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தற்போது வரை விபத்துக்கான காரணம் குறித்தோ அல்லது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்தோ பொலிஸார் எந்தத் தகவலும் வெளியிடவில்லை.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.