களையிழந்த மெக்சிகன் சுதந்திர தின கொண்டாட்டங்கள் ; பெரும் அச்சத்தில் மக்கள்
அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவினரின் நடவடிக்கைகளால், சிகாகோவில் மெக்சிகன் சுதந்திர தின கொண்டாட்டங்கள் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளன.
எப்போதும் களைகட்டும் மெக்சிகன் அணிவகுப்புப் பாதை, ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிப் போயுள்ளது.
பெரும் அச்சத்தில் மெக்சிகன் சமூகம்
வழக்கமாக லட்சக்கணக்கானோர் திரண்டு வண்ணமயமாகக் கொண்டாடும் இந்த நிகழ்வு, இம்முறை குடிவரவு அதிகாரிகளின் கைது நடவடிக்கைகளுக்குப் பயந்து வெற்று மைதானமாக மாறியுள்ளதாகப் பரவலாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அணிவகுப்பில் கலந்து கொண்ட சிலர், தங்களின் உரிமைகள் குறித்த பிரசுரங்களை விநியோகித்ததாகவும், குடிவரவு அதிகாரிகளைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்ய தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளால், சிகாகோவில் உள்ள மெக்சிகன் சமூகம் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளது. பல விழாக்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த இடம் வழக்கமாக நிரம்பி வழியும் என்றும் இப்போது ஒரு பேய்கள் வாழும் கிராமம் போல வெறிச்சோடிவிட்டது எனவும் ஒரு உள்ளூர்வாசி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழ்நிலை, சிகாகோவின் மெக்சிகன் சமூகத்தினரிடையே பெரும் கலக்கத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.