கால்பந்து போட்டியின்போது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு! 4 பேர் பலி
மெக்சிகோவில் இடம்பெற்ற கால்பந்து போட்டியின் போது மர்ம நபர்கள் நடத்திய சரமாரியான துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
மெக்சிகோ நாட்டின் மோரேலோஸ் மாகாணம் யேகாபிக்ஸ்ட்லா நகரில் கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்தது.
அந்த நகரின் முன்னாள் மேயர் ரெபுஜியோ அமரோ லூனா உள்பட ஏராளமானோர் கால்பந்து போட்டியை கண்டு ரசித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு துப்பாக்கிகளுடன் வந்த மர்ம நபர்கள் சிலர் கால்பந்து போட்டியை பார்த்து கொண்டிருந்தவர்களை குறிவைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உயிர் பயத்தில் அங்கிருந்த அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இருப்பினும், இந்த துப்பாக்கிச்சூட்டில் யேகாபிக்ஸ்ட்லா நகர முன்னாள் மேயர் ரெபுஜியோ அமரோ லூனா உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.