அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட பிரபலமான போதைப்பொருள் கடத்தல்காரர்கள்
மெக்சிகோவில் வசித்து வந்த மிகவும் பிரபலமான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிலர் நேற்று அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
நாடுகடத்தப்பட்ட 29 பேரில் அமெரிக்கப் புலனாய்வு முகவரை கொலைசெய்ததற்காகப் பல தசாப்த காலமாகத் தேடப்பட்டு வந்த ரஃபேல் காரோ குயன்ரிஈரோ என்பவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுகடத்தப்பட்டவர்கள் அமெரிக்க நீதித்துறை சட்டங்களுக்கு அமைய மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத இடம்பெயர்வு மற்றும் போதைப்பொருள் விடயங்களுடன் டொனால்ட் ட்ரம்பை தொடர்புப்படுத்தியுள்ள வர்த்தக நடவடிக்கைகளைத் தவிர்க்க அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள மெக்சிகோ போராடி வரும் நிலையில், முற்றிலும் எதிர்பாராத நிலையில் நாடுகடத்தல்கள் இடம்பெற்றுள்ளன.
இது தவிர, டொனால்ட் ட்ரம்ப் எட்டு லத்தீன் அமெரிக்கப் போதைப்பொருள் கடத்தல் அமைப்புக்களையும், ஆறு மெக்சிக்கன் பாரிய கடத்தல்காரர்களையும், பயங்கரவாத அமைப்புகள் எனப் பெயரிட்டுள்ளார்.
வன்முறை அமைப்புக்களால் அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த, சில சந்தர்ப்பங்களில் தங்கள் உயிரைக் கொடுத்த துணிச்சலான சட்ட அமுலாக்கத் தரப்பினரைக் கௌரவிக்கும் வகையில் கடத்தல் காரர்களுக்கு எதிராகக் கடுமையான சட்டம் பிரயோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில், அதிக எண்ணிக்கையிலான சந்தேக நபர்களை ஒப்படைத்து, வரலாற்றுச் சிறப்பை கொண்டது என அமெரிக்கப் போதைப்பொருள் அமுலாக்க நிர்வாகத்தின், முன்னாள் சர்வதேச நடவடிக்கைகளின் தலைவரான மைக் விஜில் தெரிவித்துள்ளார்.