காளையால் தூக்கி விசப்பட்ட வீரர்: ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
மெக்சிகோவில் உள்ள லக்ஸ்காலா மத்திய மாகாணத்தில் நடைபெற்ற காளை சண்டை போட்டியில் காளை முட்டியதில் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் 26 வயதான ஜோஸ் ஆல்பர்டோ ஆர்டிகா என்பவரே பாதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஆல்பர்டோ ஆர்டிகா ஆடுகளத்தில் மண்டியிட்டபடி கையில் துணியுடன் காளைக்காக காத்திருந்துள்ளார்.
அப்போது, ஆவேசத்துடன் வந்த காளை அவரை நெருங்கியது. அப்போது அவர் விலகுவதற்குள் துணியுடன் அவரையும் சேர்த்து முட்டி சென்றது.
இதில், குறித்த நபரின் கழுத்து பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டது. காது, வாய் பகுதி உள்ளிட்ட இடங்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
காளை முட்டியதும் தூக்கி வீசப்பட்ட அவர், சிறிது நேரத்திற்கு எழுந்து களத்தில் இருந்து நடந்து வெளியேறினார். ஆனால், அதன்பின்னர் சரிந்த அவரை உடனிருந்தவர்கள் உடனடியாக தூக்கி சென்றனர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையும் நடந்தது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட கூடிய நிலை காணப்படுகிறது என்று மருத்துவ அறிக்கை தெரிவிக்கின்றது.
மெக்சிகோ நகரில், விலங்கு நல ஆர்வலர்களின் சட்ட போராட்டம் எதிரொலியாக காளை சண்டைக்கு தடை விதிக்க கூடிய சூழல் உள்ளது.
இந்த நிலையில், காளை சண்டையில் கலந்து கொண்ட வீரர் காயமடைந்து உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.