ஒரே ஒரு புள்ளி… கனடாவிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் தவிக்கும் குடும்பம்
ஒரே ஒரு புள்ளி குறைவான மதிப்பெண் காரணமாக, கியூபெக்கில் கடந்த நான்கு ஆண்டுகளாக வாழ்க்கையை கட்டியெழுப்பிய ஒரு குடும்பம் இன்று நாடு கடத்தப்படும் அபாயத்தில் சிக்கியுள்ளது.
மோனிகா கொலின் சில்வா மற்றும் அவரது கணவர் கியூபெக்கில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். தங்களின் எதிர்காலத்தை அங்கேயே அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே ஒரே கனவாக இருந்தது.
ஆனால், இந்த வாரம் அவர்களின் பட்டமேற்படிப்பு பிந்தைய வேலை அனுமதி (Post-Graduation Work Permit) விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாகவே வேலை நிறுத்தி நாடை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

“என் சக ஊழியர்கள், நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். இது எப்படி நடந்தது என்று யாருக்கும் புரியவில்லை,” என மோனிகா வேதனையுடன் கூறுகிறார்.
மெக்சிகோவைச் சேர்ந்த மோனிகா, தனது மகள் விக்டோரியாவை கர்ப்பமாக இருந்தபோதே, பாதுகாப்பான மற்றும் வரவேற்கும் நாடு என்ற நம்பிக்கையுடன் கனடாவை நோக்கி பயணிக்க முடிவு செய்தார். “கனடா பாதுகாப்பானது, வெளிநாட்டவர்களை வரவேற்கும் நாடு என்று நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம்,” என அவர் நினைவுகூர்கிறார்.
பிசியோதெரபி கற்ற மோனிகா, லாவல் பல்கலைக்கழகத்தில் (Université Laval) பொருளியல் துறையில் முதுகலைப் பட்டம் பெறுவதற்காக ஆங்கிலம், பிரெஞ்சு மொழித் தகுதிகள், முன்தகுதி பாடங்கள் என நீண்ட முயற்சிகளில் ஈடுபட்டார்.
2022 ஆம் ஆண்டு இறுதியில் அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்த அவர், தனது நான்கு வயது மகள் மற்றும் கணவருடன் கியூபெக் நகருக்கு குடிபெயர்ந்தார். மூன்றாவது மொழியில் முதுகலை படிப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது.
ஆனாலும் நான் வெற்றி பெற்றேன் என மோனிகா கூறுகிறார். கனவுகளை சிதைத்த ‘ஒரே புள்ளி’ கடந்த மே மாதம் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, வாழ்க்கையில் ஒளி தெரிந்ததாக மோனிகா நினைத்தார்.
தனது துறையில் வேலை கிடைக்காததால், இரண்டு பள்ளிகளில் குழந்தைகள் பராமரிப்பு சேவையில் பணியாற்றத் தொடங்கினார்.
ஆனால், ஜனவரி 26 அன்று வந்த தகவல் அந்த நம்பிக்கையை முற்றிலுமாக உடைத்தது. பட்டமேற்படிப்பு பிந்தைய வேலை அனுமதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அவருக்கு அறிவிக்கப்பட்டது.
உடனடியாகவே அவர் மற்றும் அவரது கணவர் வேலை நிறுத்த வேண்டும் என்றும், விரைவில் மெக்சிகோ திரும்ப வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த அனுமதிக்கு, பிரெஞ்சு மொழித் தேர்வில் நான்கு பகுதிகளில் தேர்ச்சி பெற வேண்டும்.
அதில் மூன்று பகுதிகளில் தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்ணை விட அதிகமாக மோனிகா பெற்றிருந்தார். ஆனால், எழுத்துத் தேர்வில் அவர் பெற்றது 427 புள்ளிகள் மட்டுமே. தேவைப்படுவது – 428 என்பது குறிப்பிடத்தக்கது.
2024 இறுதிக்குப் பிறகு, பட்டமேற்படிப்பு பிந்தைய வேலை அனுமதிக்காக மொழித் தேர்வு முடிவுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
மோனிகாவுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு இருந்தாலும், அதற்கான கட்டணம் நூற்றுக்கணக்கான டொலர்களாக இருப்பதால், தற்போதைய பொருளாதார சூழலில் அது சாத்தியமில்லை என அவர் கூறுகிறார்.
“வாடகை செலுத்துவதற்கே சிரமப்படுகிறோம். மெக்சிகோ திரும்புவதற்கான விமான டிக்கெட்டுக்குப் பணம் எங்கே?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மொழித் தகுதி அவசியம் என்பதைக் புரிந்துகொள்வதாக கூறும் மோனிகா, இடைக்கால அவகாசம் அல்லது வேலை தொடர அனுமதி வழங்கியிருக்கலாம் என ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.