WordPad-க்கு விடை கொடுக்கும் மைக்ரோசாஃப்ட்
விண்டோஸ் 95 இயங்குதள வெர்ஷன் முதல் அதற்கடுத்து அறிமுகமான அனைத்து விண்டோஸ் இயங்குதள வெர்ஷன்களிலும் தவறாமல் இடம் பிடித்து வருகிறது மைக்ரோசாஃப்ட் WordPad.
சுமார் 28 ஆண்டு காலமாக கணினியில் WordPad மென்பொருள் இன்பில்ட் வகையில் இடம்பெற்று வருகிறது. இந்த சூழலில் அதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விடை கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விண்டோஸ் இயங்குதளத்தின் புதிய வெர்ஷன்களில் இனி WordPad இருக்காது என சொல்லப்படுகிறது. நீக்கப்பட்ட இந்த மென்பொருளை மீண்டும் பயனர்கள் இன்ஸ்டால் செய்ய முடியாது எனவும் தெரிகிறது.
இதனை ‘டெப்ரிகேட் விண்டோஸ் அம்சம்’ என மைக்ரோசாஃப்ட் கடந்த செப்டம்பரில் அறிவித்தது.
இதன் மூலம் இந்த மென்பொருள் மேற்கொண்டு டெவலப் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
WordPad-க்கு மாற்றாக மைக்ரோசாஃப்ட் Word மற்றும் விண்டோஸ் நோட்பேட் போன்ற மென்பொருளை பயன்படுத்துமாறு பயனர்கள் மத்தியில் மைக்ரோசாஃப்ட் புரோமோட் செய்யும் எனவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இனி அடுத்தடுத்து வெளியாகும் விண்டோஸ் இயங்குதள வெர்ஷன்களில் WordPad இடம்பெறாது என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
எளிமையான முறையில் டெக்ஸ்ட் எடிட்டிங் செய்ய பயனர்கள் இனி கணினியில் வேறொரு மென்பொருளை பயன்படுத்த வேண்டி உள்ளது.
ஆனாலும் இந்த முடிவை மைக்ரோசாஃப்ட் மாற்றிக் கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர் Cortana, மைக்ரோசாஃப்ட் எட்ஜ், விண்டோஸ் ஸ்பீச் ரெக்னேஷன் போன்றவை டெப்ரிகேட் அம்சங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.