ஈரானின் எச்சரிக்கைகளால் அதிரும் மத்திய கிழக்கு ; ட்ரம்பின் திட்டத்தால் காத்திருக்கும் ஆபத்து
அமெரிக்காவின் பொருளாதார தடை முடிவை ஆதரித்தால் ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட ஏற்றுமதி செய்ய முடியாதபடி கடும் பதிலடி தரப்படும் என்று வளைகுடா நாடுகளுக்கு ஈரான் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் பிப்ரவரி மாதம் தொடங்கிய மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்தாலும் அவ்வப்போது மீண்டும் மோதல் ஏற்படுகிறது. இடையிடையே அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றாலும் அதில் இருதரப்புக்கும் சுமுக முடிவு எட்டப்படவில்லை.

இதனால் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் திட்டமிட்டுள்ளாா்.
ஈரான் மீதும், ஈரானை ஆதரிக்கும் நாடுகள் மீதும் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கப் போவதாக ட்ரம்ப் அண்மையில் அறிவித்தாா்.
இந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார தடைகள் தொடா்பான புதிய நடவடிக்கைகளை வளைகுடா நாடுகள் ஆதரிக்கக் கூடாது என்றும், அப்படி ஆதரித்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் தொடா்ந்து எச்சரித்து வருகிறது.
இந்நிலையில், டெஹ்ரானில் செய்தியாளா்களிடம் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் இஸ்மாயில் பகேயி, அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் இந்த பிராந்தியத்தில் அமைதி ஏற்படாது என்றும், அந்தத் தடைகளுக்கு ஈரான் கடுமையான பதிலடி தரும் என்றும் எச்சரித்தாா்.