மத்திய கிழக்கு பதற்ற சூழல் ; ஈரான்–பாகிஸ்தான் உறவை வலுப்படுத்தும் நடவடிக்கை
ஈரானுக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், பாகிஸ்தான் கொடியுடன் கூடிய 20 கப்பல்கள் ஹோர்முஸ் (Hormuz) நீரிணை வழியாகப் பயணிப்பதற்கு ஈரான் இணக்கம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான இஷாக் தார் (Ishaq Dar) தனது X தளத்தில் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த உடன்படிக்கையின் அடிப்படையில், தினசரி இரண்டு பாகிஸ்தான் கப்பல்கள் வீதம் ஹோர்முஸ் கடல் வழிப்பாதையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

ஈரானின் இந்த நடவடிக்கையைப் பாராட்டியுள்ள இஷாக் தார், இது பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கான ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்து கடும் கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகியுள்ளது.
இவ்வாறான நிலையில், பாகிஸ்தான் கப்பல்களுக்கு ஈரான் வழங்கியுள்ள இந்தச் சலுகை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதுடன், சர்வதேச எரிசக்தி விநியோகச் சங்கிலியில் ஒரு சிறிய நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
"இந்த நடவடிக்கை அமைதிக்கான ஒரு முன்னோடியாகும். பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மட்டுமே தற்போதைய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும்" என அமைச்சர் இஷாக் தார் மேலும் தெரிவித்துள்ளார்.