டெக்சாஸ் மாநிலத்தில் இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்து
அமெரிக்கா டெக்சாஸ் மாநிலத்தில் அபாசி (Apache) இராணுவ ஹெலிக்கொப்டர் ஒன்று வயல்வெளியில் விழுந்து நொறுங்கியதில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து ஆஸ்டினிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் வடக்கே உள்ள பெல் கவுண்டியில் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஃபோர்ட் ஹூட் இராணுவத் தளத்தின் நடவடிக்கைகளின்போது AH-64 அபாசி ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிக்கொப்டரில் பயணித்த இரு வீரர்களும் உயிரிழந்துள்ளதாக பெல் கவுண்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கும் பணிகள் நிறைவடையும் வரை அவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படமாட்டாது என ஃபோர்ட் ஹூட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஹெலிக்கொப்டர் விழுந்த பகுதியில் பாரிய புல்வெளித் தீ ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.