ஹோர்முஸ் நீரிணையில் 24 மணிநேரத்தில் 5 எண்ணெய்க் கப்பல்கள் மீது கண்ணிவெடித் தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணையில் கடந்த 24 மணிநேரத்திற்குள் ஐந்து எண்ணெய்க் கப்பல்கள் கண்ணிவெடித் தாக்குதல்களுக்கு உள்ளாகி தீப்பற்றி எரிந்ததாக ஈரானிய கடற்படை அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது முன்னெடுத்துள்ள போரைத் தொடர்ந்து, சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் கூட்டாளி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களின் போக்குவரத்துக்கு ஈரான் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வெளிநாட்டுக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையின் குறிப்பிட்ட கடல்வழிப் பாதைகள் ஊடாக மாத்திரமே பயணிக்க அனுமதிக்கப்படுவதாகவும், ஏனைய பாதைகளில் கண்ணிவெடிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரானின் அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற ஐந்து எண்ணெய்க் கப்பல்கள் கடந்த 24 மணிநேரத்தில் கண்ணிவெடித் தாக்குதல்களுக்கு உள்ளாகியதாக ஈரானிய கடற்படை நவம்பர் 14ஆம் திகதி அறிவித்துள்ளது.
இதில், இன்று காலை முதல் மாத்திரம் இரண்டு கப்பல்கள் கண்ணிவெடித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு தீப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தாக்குதல்களுக்கு உள்ளான கப்பல்களில் பயணித்த மாலுமிகளின் நிலைமை தொடர்பில் இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
குறித்த ஐந்து கப்பல்களும் ஈரானின் எச்சரிக்கையைப் புறக்கணித்து, தங்களது ரேடார் கருவிகளை அணைத்த நிலையில் நீரிணையைக் கடக்க முயன்றதாக ஈரானிய தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிபொருள் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை, சர்வதேச கடல்சார் வர்த்தகம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், ஐந்து கப்பல்கள் மீதான தாக்குதல் குறித்த தகவல்கள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.