அமெரிக்காவில் ஈவிரக்கமின்றி பெண் ஒருவரை சுட்டுகொன்ற அதிரடிப் படையினர் ; டிரம்ப்பின் பேச்சால் சர்ச்சை!
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் ஐசிஇ (ICE) அதிரடிப் படையினர் நடத்திய சோதனையின் போது, 37 வயதான ரெனீ நிக்கோல் குட் என்ற பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிரவைத்துள்ளது.
சுடப்பட்ட பெண் தனது காரால் அதிகாரிகளை மோத முயன்றதாகவும், இது ஒரு பயங்கரவாதச் செயல் என்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

டிரம்ப்பின் பேச்சால் சர்ச்சை
ஆனால், அந்தப் பெண் அங்கிருந்து தப்பிச்செல்லவே முயன்றார் என்றும், அவரை நோக்கி மூன்று முறை முகத்தில் சுட்டது அப்பட்டமான அராஜகம் என்றும் மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அந்தப் பெண் அதிகாரிகளைக் கொல்ல முயன்றதாகவும், தற்காப்புக்காகவே அதிகாரி சுட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

"அந்த அதிகாரி உயிர் பிழைத்ததே பெரிய விஷயம், அவர் அதிர்ஷ்டசாலி" என்று ட்ரம்ப் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணின் உயிர் பறிபோயிருக்கும் வேளையில், எந்தக் காயமும் அடையாத அதிகாரியைப் பார்த்து அவர் 'அதிர்ஷ்டசாலி' என்று கூறியது பொறுப்பற்ற ஒரு பதில் எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ ஆதாரங்கள், ட்ரம்ப்பின் வாதத்திற்கு மாறாக உள்ளன. கார் அதிகாரிகளை நோக்கிப் பாய்வதற்குப் பதிலாக, அவர்களைத் தவிர்த்துவிட்டுச் செல்லவே அந்தப் பெண் முயன்றது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.
சுடப்பட்ட பெண்ணின் ஆறு வயதுக் குழந்தை கதறித் துடிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்தப் பெண் போராட்டக்காரர் கிடையாது என்றும், பயத்தில் அங்கிருந்து நகர முயன்றபோதுதான் சுடப்பட்டார் என்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்கக் கூறி வருகின்றனர்.
இந்தக் கொடூரமான கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மினியாபோலிஸ் வீதிகளில் மக்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர்.
அமெரிக்கத் தேசியக் கொடிகளைத் தீயிட்டுக் கொளுத்தியும், ஐசிஇ (ICE) அமைப்புக்கு எதிராக முழக்கமிட்டும் மக்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.