முதல்முறையாக பன்றியின் கல்லீரல் பொருத்திய முதியவர் 171 நாள்கள் வாழ்ந்த அதிசயம்
உலகிலேயே முதல்முறையாக பன்றியின் கல்லீரல் பொருத்தப்பட்ட முதியவர் 171 நாள்கள் வாழ்ந்துள்ளார்.
பன்றியின் இதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளை மனிதனுக்கு பொருத்தும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதில் பெரும்பாலானவை வெற்றியும் பெற்று வருகின்றன. பன்றியின் உறுப்புகள் மனிதர்களின் உறுப்புகளுடன் நன்கு ஒத்துப்போவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் உலகிலேயே முதல்முறையாக சீனாவில் பன்றியின் கல்லீரல் ஒன்று 71 வயது முதியவருக்கு பொருத்தப்பட்டு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அந்த நபர் 171 நாள்களுக்குப் பிறகு இரைப்பை குடல் ரத்தப்போக்கு காரணமாக இறந்துள்ளார்.
சீன அன்ஹுய் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் 2024 மே மாதம், முதியவர் ஒருருக்கு ஹெபடைடிஸ் பி, பெரிய கல்லீரல் கட்டி இருந்த நிலையில் மனித கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை சாத்தியமாகாத நிலையில் மரபணு மாற்றப்பட்ட 11 மாத பன்றியின் கல்லீரல் பொருத்தப்பட்டது.
நோயாளியின் கல்லீரலில் உள்ள கட்டியை அகற்றி கல்லீரலின் மீதமுள்ள பகுதியில் பன்றியின் கல்லீரலை வெற்றிகரமாக இணைத்தனர்.
பன்றியின் கல்லீரல் மிகவும் நன்றாகவே செயல்பட்டதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.