குறை கூறுவதா? கடும் மிரட்டல் விடுத்த கிம் ஜோங் உன் சகோதரி
வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனையை விமர்சனம் செய்த தென் கொரியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் கிம் ஜோங் உன் சகோதரி.
தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சரை மிக மோசமாக திட்டிய கிம் ஜோங் உன் சகோதரி கிம் யோ ஜோங், கடும் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
வடகொரியா சமீப நாட்களில் தொடர்ந்து ஏவுகணை சோதனை முன்னெடுத்து வருவது, கொரியா பிராந்தியத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மட்டுமின்றி, அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்ற பின்னர், வடகொரிய வரலாற்றில் மிகப்பெரிய ஏவுகணை சோதனை ஒன்றையும் கிம் ஜோங் உன் நிகழ்த்திக் காட்டினார்.
ஆனால் தற்போது அந்த ஏவுகணை சோதனையானது வெறும் பித்தலாட்டம் எனவும், தோல்வியில் முடிந்த சோதனை அது எனவும் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தென் கொரியாவை குறிவைத்து வடகொரியா ஏவுகணை தாக்குதல் முன்னெடுத்தால், அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார் தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர்.
இந்த நிலையிலேயே கிம் யோ ஜோங் தென் கொரியா மீது காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தென் கொரியா அதன் பாதுகாப்பு அமைச்சரின் பொறுப்பற்ற கருத்துக்களால் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொள்ளக்கூடும் எனவும், பேரழிவைத் தடுக்க வேண்டுமானால் தென் கொரியா தன்னைத்தானே ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தென் கொரியா முன்கூட்டியே வட கொரியாவைத் தாக்கினால், இரக்கமின்றி சியோலில் உள்ள முக்கிய இலக்குகளையும் தென் கொரிய இராணுவத்தையும் வட கொரிய துருப்புகள் அழித்தொழிக்கும் என மிரட்டல் விடுத்துள்ளார் வடகொரிய தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழுவில் செயலாளரான பாக் ஜாங் சோன்.