உறைந்துபோன குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர்: அதிர்ச்சியில் குடும்பம்
அமெரிக்காவில் கடந்த வாரம் ஏற்பட்ட பனிப்புயல் வேளையில், மாயமான மருத்துவர் ஒருவர், உறைந்துபோன குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் பிரபல மருத்துவமனை ஒன்றில் உளவியல் சிகிச்சை மருத்துவரான Bolek Payan பனியில் சிக்கி உடல் உறைந்து மரணமடைந்துள்ளதை அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.
கடந்த 22ம் திகதி மருத்துவர் பயான் மாயமானதாக கூறப்படுகிறது. அன்றைய நாள் இரவு சுமார் 9.30 மணியளவில், மருத்துவர் பயான் குடியிருக்கும் பகுதியில் வெப்பநிலை 20F வரையில் குறைந்துள்ளது.
அதன் அடுத்த நாட்களில் அப்பகுதியில் வெப்பநிலை -2F என்ற அளவில் சரிவடைந்துள்ளது. 22ம் திகதி வியாழக்கிழமை மருத்துவர் பயான் பணி முடித்து மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின்னர் எவ்வித தகவலும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றே குடும்பத்தினரும் நண்பர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அவர் காணாமல் போனதாக கூறி, அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிரமான தேடுதல் நடவடிக்கையை பொலிசார் முன்னெடுத்துள்ளனர். ஆனல் அவர் தொடர்பில் எந்த தகவலும் கிட்டாத நிலையில், அவரது குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள குளத்தில் தேடலாம் என முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து டிசம்பர் 26, திங்களன்று உறைந்துபோன குளத்தில் துளையிட்டு, சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் உள்ளே சென்று தேடியுள்ளனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மதியத்திற்குமேல் அந்த குளத்தில் மருத்துவர் பயானின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
மருத்துவர் பயான் மாயமானதாக புகார் தெரிவிக்கும் முன்னரே, அவர் குளத்தில் சிக்கி மரணமடைந்திருக்கலாம் என்றே அதிகாரிகள் தரப்பு நம்புகின்றனர்.