இணையத்தில் விடுத்த மிரட்டல்: இளம்பெண் ஒருவரை அடுத்து இன்னொருவர் கைது
மிசிசாகா உயர்நிலைப் பள்ளி தொடர்பில் இணையத்தில் மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இளைஞர் ஒருவர் கைதாகியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் சனிக்கிழமை பீல் பொலிசார் தெரிவிக்கையில், 15 வயதான மிசிசாகா இளைஞர் கைதாகியுள்ளதாகவும், பாடசாலை மீது மிரட்டல் விடுத்த விவகாரத்தில் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
மார்ச் 9ம் திகதி பகல் சமூக ஊடகம் வாயிலாக Lincoln M. Alexander உயர்நிலைப் பள்ளி தொடர்பில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கைதான அந்த இளைஞர், சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் மிரட்டல் விடுத்தது, அபாயம் ஏற்படுத்தும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கை எதிர்கொள்கிறார்.
மேலும், நிபந்தனைகளுடன் அவர் விடுவிக்கப்பட்டதாகவும், பிராம்டன் நீதிமன்றத்தில் பின்னர் ஒருநாள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வியாழக்கிழமை 16 வயது பாடசாலை மாணவி ஒருவரும் சமூக ஊடகங்களில் மிரட்டல் விடுத்துள்ள வழக்கில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.