2.3 கோடி இலங்கை ரூபாக்கு விற்பனையாகிய மொபைல்!
2007 ஆம் ஆண்டு சந்தைக்கு விடப்பட்ட முதலாவது ஐபோன் ரக தொலைபேசியொன்று ஏலத்தில் 63,356.40 அமெரிக்க டொலர்களுக்கு (2.3 கோடி இலங்கை ரூபா. 52 இலட்சம் இந்திய ரூபா) விற்பனை செய்யப்பட்டுள்ளதக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த தொலைபேசி ஏத்தில் விற்பனையாகியது. இத்தொலைபேசி பயன்படுத்தப்படாமலும், அசல் பொதியிலிருந்து பிரிக்கப்படாத நிலையிலும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 ஆம் திகதி எல்சிஜி ஒக்ஷன்ஸ் எனும் ஏல விற்பனை நிறுவனத்தினால் இத்தொலைபேசி ஏல விற்பனைக்கு விடப்பட்டது. ஆரம்ப விலையாக 2,500 டொலர் குறிப்பிடப்பட்டிருந்தது.
கரண் கிறீன் எனும் பெண்ணுக்கு சொந்தமானதாக இத்தொலைபேசி இருந்தது. 2007 ஆம் ஆண்டு அவர் புதிய வேலை ஒன்றை பெற்றபோது அன்பளிப்பாக அத்தொலைபேசி தனக்கு வழங்கப்பட்டதாக 2019 ஆம் ஆண்டில் அவர் தெரிவித்திருந்தார்.
அத்தொலைபேசி கிடைப்பதற்கு முன்னர் மற்றொரு தொலைபேசியை அவர் வாங்கியிருந்தார். இதனால் அன்பளிப்பாக கிடைத்த இத்தொலைபேசியின் பொதியை பிரிக்காமலேயே அவர் வைத்திருந்தார்.
கடந்த வருடம் மற்றொரு முதல் தலைமுறை ஐபோன் தொலைபேசி 39,000 டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதை அறிந்தபின், தனது தொலைபேசியை விற்பனை செய்வதற்காக ஏல விற்பனை நிலையத்துடன் தான் தொடர்புகொண்டதாக கிறீன் கூறியுள்ளார்.
2007 ஆம் ஆண்டு வெளியான முதல் தலைமுறை ஐபோன்களில் 4ஜிபி மெமரி தொலைபேசி 499 டொலர்களுக்கும் 8 ஜிபி தொலைபேசி 599 டொலர்களுக்கும் அப்போது விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் கரண் கிறீனின் தொலைபேசியானது 2007 ஆம் ஆண்டின் விலையைவிட 100 மடங்கு அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது. 3.5 அங்குல திரையையும் 2 மெகாபிக்ஸல் கெமராவையும் இத்தொலைபேசி கொண்டுள்ளது.
மேலும் 6.1 அங்குல திரையைக் கொண்டுள்ள புதிய ஐபோன் 14 ரக தொலைபேசிகளின் ஆரம்ப விலை 799 டொலர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.