நாடொன்றில் அதிகரிக்கும் குரங்கம்மை!
பிரேசிலில் இதுவரை 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாட்டில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய அனைத்துத் தரவுகளையும் சேகரிக்குமாறு சுகாதார கண்காணிப்பு மூலோபாய தகவல் மையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
லத்தீன் அமெரிக்காவில் அதிக சனத்தொகை கொண்ட நாடான பிரேசிலில் 52 உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளுடன் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்களை பதிவு செய்துள்ள மாநிலமாக சாவ் பாலோ உள்ளது.
அதனை தொடர்ந்து ரியோ டி ஜெனிரோவில் 16 தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள தொற்றாளர்கள் மினாஸ் ஜெரைஸ், ரியோ கிராண்டே டோ சுல், ரியோ கிராண்டே டோ நோர்டே மற்றும் ஃபெடரல் மாவட்டங்களில் பதிவாகியுள்ளன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை பிரேசில் நாட்டில் ஜூன் மாத தொடக்கத்தில் சாவ் பாலோ நகரில் முதலாவது குரங்கு அம்மை நோய் தொற்று பதிவாகியிருந்தது.
மேலும் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளுக்குச் சென்ற 41 வயதுடைய ஒருவரிடம் குரங்கு அம்மை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.