குரங்கம்மை அச்சம்; காட்டு விலங்குகளின் இறைச்சிக்கு தடை விதித்த நாடு!
குரங்கம்மை நோய் அச்சத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காட்டு விலங்குகளின் இறைச்சிக்கு நைஜீரிய அரசு தடை விதித்துள்ளது.
நைஜீரியாவில் இந்த மாதத்தில் ஆறு குரங்கம்மை நோய் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் இந்த ஆண்டில் 21 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
தொற்று இருக்கும் விலங்குகளை உண்பதால் நோய் பரவ வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் குரங்கம்மை மிதமான வைரஸ் தொற்று என்பதோடு நைஜீரியாவில் அது ஓர் பிராந்திய நோயாகவே உள்ளது. இது வெப்பமண்டல காடுகளுக்கு அருகில் இருக்கும் தொலைதூர பகுதிகளிலேயே ஏற்படுகிறது.
இந்நிலையில் ஆபிரிக்க பிராந்தியத்தின் நோயாக இருக்கும் குரங்கம்மை ஐரோப்பாவில் அண்மையில் அதிகரித்து வருவதற்கான காரணத்தை கண்டறிவதில் விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர்.
எனினும் குரங்கம்மை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவதாகக் கூறப்படுகிறது. நோய் தொற்று இருக்கும் ஒருவருடன் நெருங்கி பழகுவதால் இந்த வைரஸ் பரவக்கூடும் என்றும், தோலில் இருக்கும் காயங்கள், சுவாசக்குழாய் அல்லது கண்கள், மூக்கு அல்லது வாய் வழியாக இந்த வைரஸ் உடலுக்குள் ஊடுருவ முடியும் எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் காட்டு விலங்குகளின் இறைச்சி நைஜீரிய தொலைதூர பகுதிகளில் வாழும் மக்களின் பிரதான உணவு மூலமாக இருக்கும் நிலையில், இந்தத் தடையை அரசு எவ்வாறு கையாளும் என்பது தெளிவில்லாமல் உள்ளது.
அதேவேளை நைஜீரியாவில் பல காட்டு விலங்கு இறைச்சி சந்தைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.