ஐரோப்பிய நாடுகளில் முந்தும் ஸ்பெயின்: எச்சரிக்கும் நிபுணர்கள்
ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை தொற்றால் அதிகம் பாதிக்கப்படவர்கள் எண்ணிக்கையில் ஸ்பெயின் முந்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் அதிகமாக காணப்பட்ட குரங்கம்மை தொற்றானது தற்போது அமெரிக்கா, கனடா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வியாபித்து வருகிறது.
இதனிடையே பல நாடுகள் தடுப்பூசி விநியோகம் தொடங்கியுள்ள நிலையில், ஸ்பெயின் நாட்டில் ஐரோப்பாவிலேயே அதிக எண்ணிக்கையில் பாதிப்பு பதிவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுவரை ஸ்பெயின் நாட்டில் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,577 என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஐரோப்பாவில் நடந்த இருவேறு விழாக்களுக்கு பின்னரே, குரங்கம்மை பரவல் உச்சம் கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, குரங்கம்மை தொற்றானது உடல் நெருக்கத்தின் மூலம் பரவியிருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதனிடையே, ஸ்பெயினை விடவும் அதிக எண்ணிக்கையில் அமெரிக்கா பதிவு செய்துள்ளது. இங்கு இதுவரை 7,100 பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மே மாதத்திற்கு பின்னர் ஒட்டுமொத்தமாக 90 நாடுகளில் சுமார் 26,000 பேர்களுக்கு குரங்கம்மை தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆப்பிரிக்காவில் 103 நோயாளிகள் சந்தேகத்திற்கு இடமளிக்கும்வகையில் இறந்துள்ளனர், பெரும்பாலும் நைஜீரியா மற்றும் காங்கோவில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், தன்பால் ஈர்ப்பாளர்கள் மற்றும் இருபாலின ஈர்ப்பாளர்கள் இடையே பாலியல் ரீதியான தொடர்பால் குரங்கம்மை பரவுகிறது என்றாலும், இது தொழில்நுட்ப ரீதியாக பாலியல் ரீதியாக பரவும் நோய் அல்ல என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.