மொத்தமாக உறைந்து போன நியூயார்க் நகரம்: 50-ஐ தொட்ட இறப்பு எண்ணிக்கை
அமெரிக்காவில் பேய்த்தனமாக தாக்கி வரும் புயலுக்கு இதுவரை 48 பேர்கள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு நியூயார்க்கில் மட்டும் புயல் தொடர்பான இறப்பு எண்ணிக்கை 27 என பதிவாகியுள்ளது. எஞ்சிய 20 இறப்புகள் நியூயார்க்கின் பஃபேலோவில் நடந்துள்ளது.
அமெரிக்கா முழுவதும் குறைந்தது 48 பேர் இறப்புக்கு காரணமான குளிர்காலப் புயலில் இருந்து தப்பிக்க மில்லியன் கணக்கான மக்கள் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடியிருப்பிலேயே பதுங்கியிருந்தனர்.
இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. புயலின் வீச்சு கிட்டத்தட்ட எதிர்பாராதது எனவும், கனடாவுக்கு அருகிலுள்ள கிரேட் லேக் முதல் மெக்சிகோவின் எல்லையில் உள்ள ரியோ கிராண்டே வரை வியாபித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்கா முழுவதும் சுமார் 60% மக்களுக்கு குளிர்காலப் புயல் தொடர்பில் அறிவுறுத்தல் அல்லது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கான விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஞாயிறு மட்டும் சர்வதேச மற்றும் உள்ளூர் விமான சேவைகள் 1,707 எண்ணிக்கையில் ரத்தாகியுள்ளது.
இதனிடையே நியூயார்க்கின் பஃபேலோ பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பனியால் மொத்தமாக மூடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.