கனடாவில் இந்த உணவுப் பொருள் குறித்து வெளியான அறிவிப்பு
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த ‘பிஸ்ஸா பாப்ஸ்’ (Pizza Pops) தயாரிப்புகளுக்கான மீளப்பெறல் நடவடிக்கை தற்போது மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது.
ஈகொலி கிருமி கலந்திருக்கக்கூடிய சந்தேகத்தின் காரணமாக, பல்வேறு வகையான பிஸ்ஸா பாப்ஸ் தயாரிப்புகள் மீளப்பெறப்பட்டுள்ளதாக கனடிய உணவு ஆய்வு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்று-சீஸ், பெப்பரோனி, பெப்பரோனி என்ட் பேக்கன், டெலக்ஸ், 3-மீட் உள்ளிட்ட வகைகள், பல்வேறு பொதி அளவுகளில் அடங்குகின்றன.

கிருமி தொற்று
பாதிக்கப்பட்ட தயாரிப்புகளின் முழுப் பட்டியல் கனடிய உணவு ஆய்வு முகவர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன், டிசம்பர் 21 அன்று அறிவிக்கப்பட்டிருந்த மீளப்பெறலும், ஈ.கொலி கிருமி தொற்று சந்தேகத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டது.
கடந்த மாதம், கனடா பொது சுகாதார முகவர் நிறுவனம், இந்தப் பரவல் ஏழு மாகாணங்களுக்கு பரவியுள்ள நிலையில், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என தெரிவித்திருந்தது.
ஈகொலி கிருமி கலந்த உணவு வாசனை அல்லது தோற்றத்தில் கெட்டதாக தெரியாமல் இருந்தாலும், உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மீளப்பெறப்பட்ட தயாரிப்புகளை பயன்படுத்தாமல் உடனடியாக குப்பையில் வீசவோ அல்லது வாங்கிய கடைக்கு திருப்பி வழங்கவோ நுகர்வோரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.