கனடிய நுகர்வோருக்கு அவசர எச்சரிக்கை
கனடாவில் பயன்படுத்தப்படும் புகழ்பெற்ற 'தெர்மோஸ்' பிராண்ட் உணவு மற்றும் பானக் கலன்களால் (Flask/Food Jars) நுகர்வோருக்குக் காயம் ஏற்படும் ஆபத்து உள்ளதால், சந்தையில் உள்ள 1.2 மில்லியனுக்கும் அதிகமான தயாரிப்புகளை உடனடியாக மீளப் பெற்றுக்கொள்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து கனடா பொது சுகாதார அமைப்பு நுகர்வோருக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனடியன் தெர்மோஸ் புரொடக்ட்ஸ் (Canadian Thermos Products Inc.) நிறுவனத்தின் கீழ், ஜனவரி 2009 முதல் நவம்பர் 2021 வரையான காலப்பகுதியில் கனடாவில் விற்பனை செய்யப்பட்ட பின்வரும் தயாரிப்புகளே இவ்வாறு மீளப் பெறப்படுகின்றன:

Stainless King Food Jars: ஜூலை 2023க்கு முன்னர் தயாரிக்கப்பட்ட SK3000 மற்றும் SK3020 ஆகிய மாடல் எண்கள் கொண்ட உணவுக் கலன்கள்.
Thermos Sportsman Food & Beverage Bottle: 2016ஆம் ஆண்டுடன் உற்பத்தி நிறுத்தப்பட்ட SK3010 என்ற மாடல் எண் கொண்ட பானக் கலன்கள்.
இந்தத் தயாரிப்புகளின் மூடிகளில் (Stopper) உட்புற அழுத்தத்தைக் குறைப்பதற்கான (Pressure relief) துளைகள் நடுவில் வடிவமைக்கப்படவில்லை. இதனால், கெட்டுப்போகக்கூடிய உணவுப் பொருட்கள் அல்லது பானங்களை இந்தத் தெர்மோஸ்களில் நீண்ட நேரம் சேமித்து வைத்திருக்கும் போது, உள்ளே அதிகப்படியான வாயு அழுத்தம் (Gas pressure) உருவாகிறது.
பின்னர் இதனைத் திறக்கும் போது, அதன் மூடி பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறி வெளியேறும் ஆபத்து உள்ளது. இதன் காரணமாக முகம் மற்றும் கண்களில் பலத்த காயம் அல்லது வெட்டுக்காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 24ஆம் திகதி வரையிலான தரவுகளின்படி, இந்தத் தயாரிப்புகள் வெடித்தது தொடர்பாக 10 புகார்கள் நிறுவனத்திற்குப் பதிவாகியுள்ளதுடன், 3 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தங்களிடம் உள்ள மேற் குறிப்பிட்ட மாடல் எண்களைக் கொண்ட தெர்மோஸ் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை "உடனடியாக நிறுத்துமாறு" கனடா பொது சுகாதார அமைப்பு நுகர்வோரைக் கேட்டுக்கொண்டுள்ளது.