கனடாவில் வரலாறு காணாத காட்டுத் தீ பரவல்
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் வடபகுதியில் காட்டுத்தீ பரவல் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. ஒன்டாரியோ இயற்கை வளங்கள் அமைச்சு இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி 180-க்கும் மேற்பட்ட காட்டுத்தீகள் செயலில் உள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 புதிய காட்டுத்தீகள் பதிவாகியுள்ளன. ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, இந்த ஆண்டு காட்டுத்தீயால் 7,250 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.
இது ஒன்டாரியோவில் இதற்கு முன் எந்த ஆண்டிலும் பதிவாகாத அளவுக்கு அதிகமான பாதிப்பாகக் கருதப்படுகிறது.

அதிகப்படியான தீப்பரவல்கள் கடந்த 10 நாட்களுக்குள் ஏற்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக இதுவரை 1,800-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெளியேற்றப்பட்ட 13 சமூகங்களில் 12 சமூகங்கள் பழங்குடியின சமூகங்கள் வாழும் பகுதிகளாகும். இந்த சமூகங்கள் தீவிர பாதிப்பை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழங்குடியினத் தலைவர்கள் ஒன்டாரியோ அரசின் காட்டுத்தீ மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து பொது விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அவர்கள், அவசர வெளியேற்ற நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை அரசு சரியான நேரத்தில் வழங்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட சமூகங்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் குற்றம்சாட்டினர்.
இதற்கு பதிலளித்த ஒன்டாரியோ முதலமைச்சர் டக் ஃபோர்டு (Doug Ford), காட்டுத்தீயை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் தனது அரசு முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.