205 குழந்தைகள் உட்பட 4400-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மாயம்!
கடந்த ஆண்டு ஸ்பெயினை அடைய முயன்ற 205 குழந்தைகள் உட்பட 4400-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் கடலில் மாயமானது தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம் என கண்காணிப்பு குழுவான Walking Borders குறிப்பிட்டுள்ளது.
கண்காணிப்பு குழு வெளியிட்ட தகவலின் படி, அபாயகரமான பாதைகள், கோளாறான படகுகள் மற்றும் கடலில் புலம்பெயர்ந்தோருக்கு உதவ செல்லும் சில கப்பல்களால் ஏற்படும் பயம், என்பனவே புலம்பெயர்ந்தோர் மரணத்திற்கு முக்கிய காரணம் என டுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2021 டிசம்பர் 20ம் திகதி வரையிலான தரவுகளின் படி, 4400 பேரில் 90 சதவிதத்திற்கும் மேற்பட்டோர், அட்லாண்டிக் பெருங்கடலில் ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்குச் செல்லும் வழியில் நிகழ்ந்த விபத்துக்களில் காணாமல் போனவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை பயணத்தின் போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உதவிக்கு அழைக்க அமைக்கப்பட்டுள்ள உதவி எண் மூலம் இந்த தரவுகளை சேகரித்ததாக கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
மேலும் இவ்வாறு விபத்துக்குள்ளாகும் ஒவ்வொரு படகு குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும், கடலில் காணாமலாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டால் அவர்கள் இறந்துவிட்டதாக கருதப்படும் என Walking Borders தெரிவித்துள்ளது.
இதேவேளை ஸ்பெயின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் படி, கடந்த ஆண்டு சுமார் 39,000 புலம்பெயர்ந்தோர் வெற்றிகரமாக ஸ்பெயினை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.