அல்பர்டாவில் மூன்று வாரங்களின் பின்னர் மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள்
அல்பர்ட்டா மாகாணம் முழுவதும் 7.4 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மூன்று வாரங்களாக நீடித்த ஆசிரியர் வேலைநிறுத்தத்திற்குப் பிறகு இன்று வகுப்புகளுக்குத் திரும்ப உள்ளனர்.
அல்பர்டா முதல்வர் டேனியல் ஸ்மித் தலைமையிலான அரசு, ஆசிரியர்களை மீண்டும் பணிக்கு அழைப்பதற்காக கனடாவின் அரசியலமைப்புச் சட்ட உத்தரவினை பயன்படுத்தியது. இதன் மூலம் 51,000 ஆசிரியர்கள் கட்டாயமாக மீண்டும் பணிக்கு திரும்பினர்.
மூன்று வாரங்களாக வகுப்புகள் நிறுத்தப்பட்டிருந்ததால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்மித் தெரிவித்துள்ளார்.

வேலைநிறுத்தம்
மேலும், "இந்த வேலைநிறுத்தம் கல்வி முறைமைக்கு திருத்த முடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது; அரசுக்கு இதற்கான வேறு வழியில்லை" எனவும் அவர் கூறினார்.
பள்ளிக் குழுக்கள் பெற்றோர்களுக்கு அனுப்பிய அறிவிப்புகளில், இன்று வகுப்புகள் வழக்கம்போல் தொடங்கும் எனினும், தேர்வுகள், கூடுதல் பாடப்பயிற்சிகள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் சில தாமதங்கள் அல்லது மாற்றங்கள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளன.
ஆசிரியர்கள் இன்று முதல் வகுப்புகளுக்குத் திரும்புவார்கள்; எந்தவிதமான “work-to-rule” நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டார்கள். ஆனால், notwithstanding clause பயன்படுத்தப்படுவது மோசமான உரிமை மீறல் என அல்பர்டா ஆசிரியர்கள் சங்கம் கண்டித்துள்ளது.
இதனிடையே அல்பர்டாவின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு, அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
வேலைநிறுத்தம் போன்ற தொழிலாளர் பிரச்சினைகளை தீர்க்க அரசுகள் இந்த பிரிவைப் பயன்படுத்தத் தொடங்கினால், பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரமே தொழிலாளர்களிடமிருந்து பறிக்கப்படும் என அந்த கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.