நாங்கள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம் ஆனால்... ட்ரம்பின் கருத்தால் சிக்கல்
ஈரானின் கடற்படையை அழித்து விட்டதாகவும், அவர்கள் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டனில் செய்தியாளர்கள் சந்திப்பில் ட;ரம்ப் பேசுகையில், "ஈரானில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.
அவர்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம் என்றால், அவர்களிடம் இரு வாரங்களுக்கு முன் கடற்படை இருந்தது ஆனால், இப்போது இல்லை. அவையெல்லாம் கடலின் அடிப்பகுதிக்குச் சென்று விட்டது. அவர்களின் 58 கப்பல்களும் 2 நாள்களிலேயே கீழே சென்று விட்டன.

அணு ஆயுதம்
அவர்கள் அணு ஆயுதங்களை வைத்திருக்க நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. அவர்களிடம் அணு ஆயுதம் இருந்தால், அவர்கள் அதனைப் பயன்படுத்தவும் செய்வர். அது நடக்க நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை.
அவர்களின் தலைவர் போய்விட்டார். அவருக்கு அடுத்த தலைவர்களும் போய்விட்டனர். அவர்களுக்கு அடுத்த நிலை தலைவர்களும் பெரும்பாலும் போய்விட்டனர். இப்போது யாரும் அங்கு தலைவராக விரும்பவில்லை. நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம் ஆனால், எங்களிடம் பேசுவதற்குத்தான் அங்கு யாரும் இல்லை.
என் முதல் பதவிக் காலத்தில் கட்டியெழுப்பிய ராணுவத்தை இந்த அளவுக்குப் பயன்படுத்துவோம் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அதற்காக மகிழ்ச்சியடைகிறேன். தொடக்கத்தில், மத்திய கிழக்கு நாடுகள் மீது அவர்கள் ஏவுகணைகளைச் செலுத்தினர். ஏனென்றால், அவர்கள் மத்திய கிழக்கைக் கைப்பற்ற விரும்பினர்" என்று தெரிவித்தார்.