கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இந்திய இளைஞர்: நெகிழவைத்த இறுதி தருணங்கள்
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இந்திய இளைஞர் ஒருவரின் உடல், சுமார் 20 நாட்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்துள்ளது.
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த குர்கிரத் சிங் (Gurkirat Singh Manocha, 26), மேல் படிப்புக்காக கனடா சென்றிருந்த நிலையில், மார்ச் மாதம் 14ஆம் திகதி, ஒரு கும்பல் அவரைத் தாக்கி படுகொலை செய்தது.
மத்தியப்பிரதேசம் மாநிலத்திலுள்ள உஜ்ஜைன் என்னுமிடத்தைச் சேர்ந்த சிங், பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Northern Lights கல்லூரியில் முதுகலைப் பட்டயப்படிப்பு படித்துக்கொண்டிருந்தார்.
படித்துக்கொண்டே வால்மார்ட் பல்பொருள் அங்காடி ஒன்றில் பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டிருந்த சிங், இம்மாதம், மார்ச் மாதம் 14ஆம் திகதி, வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது, 10 முதல் 12 பேர் வரை கொண்ட ஒரு கும்பல் அவரை சரமாரியாகத் தாக்கியதுடன், அவர் மீது வாகனம் ஒன்றையும் ஏற்றிச் சென்றது.

படுகாயமடைந்த சிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பணக்கஷ்டம் காரணமாக மகனுடைய உடலை இந்தியா கொண்டுவர வழிதெரியாமல் திகைத்துப்போன சிங் குடும்பம் அரசின் உதவியை நாடியது.
இந்நிலையில், சிங் உடல் வியாழக்கிழமை இரவு இந்தியா வந்தடைந்தது.
சிங் உடல் அஹமதாபாத் வந்தடைந்த நிலையில், சுங்க அதிகாரிகளின் ஆவண சரிபார்ப்புக்குப் பின் தொண்டு நிறுவனம் ஒன்றின் ஆம்புலன்ஸ் நேற்று காலை சிங் உடலை அவரது ஊருக்கு கொண்டு சென்றுள்ளது.
மகன் இறந்த செய்தி அறிந்தும் சுமார் 20 நாட்களாக மகனுடைய உடலைக் காண இயலாமல் தவித்துக்கொண்டிருந்த சிங்கின் தாயான ரீத்து கௌர், மகனுடைய உடல் வந்தடைந்த செய்தி கேட்டு ஓடோடிவந்துள்ளார்.
தன் மகனுடைய உடலை பத்திரமாக வீடு கொண்டுவந்து சேர்த்த ஆம்புலன்ஸ் சாரதியை இருகை கூப்பி வணங்கிய ரீத்து, கண்களில் கண்ணீர் மல்க, குரல் தளுதளுக்க அவருக்கு நன்றி கூற, சாரதியும் கண் கலங்க, அங்கிருந்த அனைவருமே அந்த காட்சியைக் கண்டு நெகிழ்ந்து கண்ணீர் விட்டுள்ளார்கள்.
அதன் பின், மாநில முதல்வர் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்த, உற்றார் உறவினர் சூழ, நேற்று சிங்குக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டுள்ளது.