பிரித்தானியாவில் வயோதிபர்களிடம் கைவரிசை காட்டிய தாயும் மகளும்!
வயோதிபர்களிடம் பணம், வங்கி அட்டைகளை திருடிவந்த குற்றச்சாட்டுக்குள்ளான 57 வயது பெண்ணுக்கும் 27 வயதான அவரின் மகளுக்கும் பிரித்தானிய நீதிமன்றமொன்று சிறைத்தண்டனை விதித்துள்ளது.
டியோன் கிளார்க் (Dion Clarke)(57), செரால் கிளார்க் (Cheryl Clarke)(27) ஆகியோரே இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் ரம்ஸ்கேட் மற்றும் கென்ட் பிராந்தியங்களில் இவர்கள் கொள்ளைகள், திருட்டுகள், மோசடிகளில் ஈடுபட்டு வந்தனர் என கென்டபறி கிறவுண் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மே மாதம் சுப்பர்மார்கெட் வாகனத் தரப்பிடத்தில் ஆண் ஒருவரின் பணப்பையை இவர்கள் அபகரித்தனர் எனவும், கடந்த ஜன் மாதம் பெண்ணொருவருக்கு உதவுவதாக நடித்து அவரின் பணப்பையை திருடினர் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது, இப்பெண்கள் கைது செய்யப்பட்டபோது, திருடப்பட்ட வங்கி அட்டைகள் பலவற்றையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதையடுத்து மதுபானம், சிகரெட் போன்றவற்றை வாங்குவதற்காக இவர்கள் கொள்ளைகளிலும் திருட்டுகளிலும் ஈடுபட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இப்பெண்கள் தம்மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர்.
செரலே கிளார்க்குக்கு 5 வருட சிறைத்தண்டனையும் அவரின் தாயார் டியோன் கிளார்க்குக்கு 3 வருடங்கள் மற்றும் 8 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடக்த்தக்கது.