புளோரிடாவில் 4 பிள்ளைகளை விட்டுவிட்டு வேலைக்கு சென்ற தாய் கைது
அமெரிக்காவின் புளோரிடாவில் தமது 4 பிள்ளைகளையும் வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்காக வெளியூர் சென்ற தாய் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஐரீன் மில்லர் என்பவரே, லாஸ் வேகஸ் நகருக்கு வேலைக்காகச் சென்றுவிட்டு, விமான மூலம் திரும்பிய வேளையில் விமான நிலையத்திலேயே கைதுசெய்யப்பட்டவராவார்.

9 முதல் 14 வயதுக்குட்பட்ட நான்கு பிள்ளைகள்
கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி இரவு 8:30 மணிக்குப் பிறகு, வீட்டில் இருந்த சிறுமி ஒருவர் அவசர உதவிப் பிரிவுக்கு அழைப்பினை மேற்கொண்டார்.
9 வயதுடைய தனது சகோதரனின் தலையில், உடற்பயிற்சிக்குப் பயன்படுத்தப்படும் எடைக்கல் விழுந்துவிட்டதாக அச்சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், வீட்டில் பெரியவர்கள் எவருமின்றி 9 முதல் 14 வயதுக்குட்பட்ட நான்கு பிள்ளைகள் மட்டுமே இருப்பதை அவதானித்தனர்.
தலையில் காயமடைந்த 9 வயதுச் சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்த பொலிஸார், அதன் பின்னர் தாயாரான ஐரீனைத் தொடர்புகொண்டனர். அப்போது, தாம் வேலை நிமித்தமாக லாஸ் வேகஸ் நகருக்கு வந்திருப்பதாகவும், பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதற்காகப் பராமரிப்பாளர் ஒருவரை நியமித்திருப்பதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறினார்.
மேலும், ஒக்டோபர் 18ஆம் திகதி பயணத்தைத் தொடங்கிய தாம், ஒக்டோபர் 23ஆம் திகதி திரும்பத் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, ஒக்டோபர் 23ஆம் திகதி புளோரிடா வந்தடைந்த ஐரீன், விமானத்திலிருந்து இறங்கியதும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
பிள்ளைகளைப் பராமரிக்காது அலட்சியமாகப் புறக்கணித்ததாக அவர் மீது 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் கைதுசெய்யப்பட்ட காட்சி, பொலிஸாரின் சீருடையில் பொருத்தப்பட்டிருந்த காமிராவில் பதிவாகியுள்ளதுடன், அக்காணொளி தற்போது இணையத்தில் பரவி வருகின்றது.