ஆடம்பர வாழ சொந்த மகனுக்கு புற்று நோய் என நாடகமாடிய தாய்!
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தனது 6 வயது மகனுக்குப் புற்றுநோய் இருப்பதாகப் பொய் நிதி வசூலித்து வாழ்ந்த அவுஸ்திரேலியத் தாய்க்கு அந்த நாட்டு நீதிமன்றம் கடும் தண்டனை விதித்துள்ளது.
தெற்கு அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 45 வயதுடைய பெண், தனது மகனுக்குப் புற்றுநோய் இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் உருக்கமான பதிவுகளை இட்டுள்ளார். இதனை நம்பிய பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சிறுவனின் மருத்துவச் செலவுக்காகப் பெருமளவு நிதியை வழங்கியுள்ளனர்.

இந்தக் கொடுமை மன்னிக்க முடியாதது
பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக பெண் செய்த செயல்கள் நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டன. சிறுவன் புற்றுநோயாளி என்று நம்புவதற்காக அவனது தலைமுடி மற்றும் புருவங்களைச் சிரைத்துள்ளார்.
உடலின் பல்வேறு பகுதிகளில் கட்டுகளைப் போட்டு, அவனை எப்போதும் சக்கர நாற்காலியில் (Wheelchair) அமர வைத்து நாடகமாடியுள்ளார். வசூலித்த பணத்தை மகனின் மருத்துவத்திற்குப் பயன்படுத்தாமல், தனது ஆடம்பரத் தேவைகளுக்காகவும் உல்லாசப் பயணங்களுக்காகவும் செலவிட்டுள்ளார்.
சிறுவனின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், மருத்துவப் பரிசோதனையில் சிறுவன் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதும், அவனுக்குப் புற்றுநோய் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி, "ஒரு தாய் தனது சொந்தப் பிள்ளைக்கே இழைத்த இந்தக் கொடுமை மன்னிக்க முடியாதது" என்று சாடினார்.
பணத்திற்காகப் பிள்ளையின் ஆரோக்கியத்தையும் அடையாளத்தையும் சிதைத்த குற்றத்திற்காக பெண்ணுக்கு 4 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.