பிரித்தானியாவில் பிரீசரில் மீட்கப்பட்ட தாயின் சடலம்; மகனுக்கு எதிராக வழக்கு!
பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் உள்ள வீடொன்றின் குளிரூட்டியில் (Chest Freezer) இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், உயிரிழந்த பெண்ணின் மகனுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி சவுத் வேல்ஸ் (South Wales) பொலிஸார், போர்த்கால் (Porthcawl) பகுதியில் உள்ள வீடொன்றிற்குச் நலன்புரிச் சோதனைக்காகச் சென்றிருந்தனர்.

கிறிஸ்டோபர் பிலிப்ஸ் (Christopher Phillips) கைது
சம்பந்தப்பட்ட முதியவரின் குடும்ப மருத்துவர் (GP) விடுத்த வேண்டுகோளுக்கமைய அங்கு சென்ற பொலிஸார், 89 வயதான சில்வியா பிலிப்ஸ் (Sylvia Phillips) என்பவரின் சடலத்தை அந்த வீட்டில் இருந்த ஒரு பெரிய குளிரூட்டிக்குள் (Chest Freezer) இருந்து மீட்டனர்.
சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் மகனான 60 வயதுடைய கிறிஸ்டோபர் பிலிப்ஸ் (Christopher Phillips) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது சட்டப்படியான அடக்கத்தைத் தடுத்தல், தாயின் சடலத்தை மறைத்து வைத்ததன் மூலம், முறைப்படியான இறுதிச் சடங்குகள் நடைபெறுவதைத் தடுத்தமை, தவறான தகவல்களை வழங்கி மோசடியில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள கிறிஸ்டோபர் பிலிப்ஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று அவர் கார்டிப் கிரவுன் நீதிமன்றத்தில் (Cardiff Crown Court) ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதேவேளை, சில்வியா பிலிப்ஸின் மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை தெளிவான முடிவுகள் எட்டப்படவில்லை.
கடந்த மார்ச் 2ஆம் திகதி கார்டிப் பல்கலைக்கழக மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இருப்பினும், மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகள் தேவைப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலத்தைத் தகனம் செய்வதற்கான சான்றிதழை உயிரிழந்தவரின் குடும்பத்தினர் கோரியிருந்த நிலையில், அதற்கு மரண விசாரணை அதிகாரி அனுமதி வழங்கியுள்ளார். மேலும் மேலதிக விசாரணைகளுக்காக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.