நியூயோர்க்கில் நெதன்யாகுவை கைது செய்ய ஆலோசனை!
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நியூயோர்க் நகருக்கு வருகை தந்தால், அவரை உள்ளூர் சட்டங்களின்படி கைது செய்ய முடியுமா என்பது குறித்து நியூயோர்க் மாநகர மேயர் சோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani) தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
செப்டம்பர் மாதம் நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து விமர்சித்து வரும் ஜனநாயக சோசலிசக் கட்சியின் புதிய மேயர் மம்தானி, நெதன்யாகு ஒரு போர்க்குற்றவாளி என்றும் அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்தப்பட வேண்டியவர் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்ட வரம்புகளுக்கு உட்பட்டே இந்த நடவடிக்கை ஆராயப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், நியூயோர்க் சட்டத் துறையுடன் இது குறித்துப் பேசி வருவதாகவும் கூறியுள்ளார்.
இருப்பினும், அமெரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உடன்படிக்கையில் கையெழுத்திடாத நாடு என்பதால், இத்தகைய கைது நடவடிக்கை சட்டப்பூர்வமாக சாத்தியமற்றது என சட்ட வல்லுநர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.