உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்... உணவுப்பொருள் ஒன்று தொடர்பில் கனேடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
குறிப்பிட்ட உணவுப்பொருள், சிலருக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என தெரியவந்துள்ளதை அடுத்து, அதை தூர எறிந்துவிடுமாறு நிறுவனம் ஒன்று மக்களை எச்சரித்துள்ளது.
Morgan Williams International Inc. என்னும் நிறுவன தயாரிப்பான Mr. Porky brand Original Scratchings என்னும் இறைச்சி சம்பந்தப்பட்ட உணவில், சால்மோனெல்லா என்ற நோய்க்கிருமி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து, அந்த உணவை திருப்பிக் கொடுத்துவிடவோ அல்லது தூர எறிந்துவிடவோ செய்துவிடுமாறு அந்நிறுவனம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி உணவை பாதித்துள்ளதை வெறும் கண்களால் பார்த்தால் கண்டுபிடிக்க முடியாது. அந்த கிருமி குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் ஆகியோருக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தினால், அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியமான உடல் நிலை கொண்டவர்கள், இந்த கிருமி தொற்று ஏற்பட்டால் காய்ச்சல், தலைவலி, வாந்தி, தலை சுற்றல், வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்சினைகளுக்கு ஆளாகக்கூடும்.
உண்மையில், மற்றொரு நாட்டில் இந்த உணவுப்பொருளில் இந்த கிருமி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த உணவுப்பொருள் திரும்பப் பெறப்படுகிறது. இதுவரை கனடாவில் அதை சாப்பிட்டு யாரும் நோய்வாய்ப்பட்டதாக தகவல் இல்லை.
ஆனால், கனேடிய உணவு பாதுகாப்பு அமைப்பு பல உணவுப்பொருட்களை தற்போது சோதனை செய்து வருகிறது. ஆகவே, சில உணவுப்பொருட்கள் திரும்பப்பெறப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.