அமெரிக்காவை சின்னாப்பின்னமாக்கிய சூறாவளி... அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
அமெரிக்க மாகாணங்கள் ஐந்தில் தொடர் சூறாவளிகள் தாக்கிய நிலையில், கென்டகி மாகாணத்தில் மட்டும் 70 பேர்கள் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ், இல்லினாய்ஸ், கென்டகி, மிசோரி மற்றும் டென்னசி ஆகிய மாகாணங்களில் சூறாவளி தாக்கியுள்ளது. குறித்த மாகாணங்களில் சூறாவளி காரணமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
இல்லினாய்ஸ் மாகாணத்தில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் அமேசான் நிறுவனத்தின் கிடங்கு இடிந்து விழுந்தது. அந்த கிடங்கில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதற்கிடையே கென்டகி மாகாணத்தில் சூறைக் காற்றுடன் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் கன மழையால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி கென்டகி மாகாணத்தில்70க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளதாக மாகாண ஆளுநர் ஆண்டி பெஷியர் நேற்று தெரிவித்தார். கென்டகி வரலாற்றில் இது ஒரு மிக மோசமான சூறாவளி நிகழ்வு. முதற்கட்ட தகவலின் படி, சுமார் 4 சூறாவளிகள் மாகாணத்தை தாக்கியதாக தெரியவந்துள்ளது.
இதில், ஒன்று கிட்டதட்ட 200 மைல்களுக்கு மேல் தாக்கிச் சென்று சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாகாணத்தில் குறைந்தபட்சம் 15 மாவட்டங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ள ஆளுநர்,
பெரும்பாலான சேதங்கள் Graves கவுண்டியில் ஏற்பட்டுள்ளது, குறிப்பாக மேஃபீல்ட் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
சூறாவளி தாக்கிய போது மேஃபீல்ட் நகரத்தில் உள்ள மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் சுமார் 110 ஊழியர்கள் பணியில் இருந்ததாகவும், இதில் 12-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்திருக்கலாம் என ஆளுநர் Andy Beshear தெரிவித்துள்ளார்.