கனடா மருத்துவமனையில் இந்தியர் மரணம்: அமெரிக்கரால் உருவாகியுள்ள சர்ச்சை
கனடாவில் மருத்துவமனை ஒன்றின் அலட்சியத்தால் இந்திய வம்சாவளியினர் ஒருவர் உயிரிழந்த விடயம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அமெரிக்கர் ஒருவர் அது குறித்து மோசமாக விமர்சித்துள்ள விடயம் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
மூன்று குழந்தைகளின் தந்தையும் இந்திய வம்சாவளியினருமான ப்ரஷாந்த் ஸ்ரீகுமார் (22) என்பவருக்கு, அலுவலகத்தில் பணி செய்துகொண்டிருக்கும்போது, இம்மாதம், அதாவது, டிசம்பர் மாதம் 22ஆம் திகதி, அவருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவர் எட்மண்டனிலுள்ள Grey Nuns Hospital என்னும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அவர் கடுமையான நெஞ்சு வலி வந்து துடித்த நிலையிலும், எட்டு மணி நேரமாக மருத்துவமனையின் நோயாளிகள் காத்திருக்கும் அறையில் அமரவைக்கப்பட்டுள்ளார்.
கடைசியாக மருத்துவர்கள் வந்து அவரை பரிசோதிக்க அழைத்துச் சென்ற சில விநாடிகளில் நெஞ்சைப் பிடித்தபடி சாய்ந்த ப்ரஷாந்த் உயிரிழந்துவிட்டார்.

ப்ரஷாந்தின் மரணம் உலகின் கவனம் ஈர்த்துள்ள நிலையில், அமெரிக்க சட்டத்தரணி ஒருவர், ப்ரஷாந்தின் இறப்பை புலம்பெயர்தலுடன் தொடர்புபடுத்தி மோசமாக விமர்சித்துள்ளார்.
சமூக ஊடகமான எக்ஸில், Andrew Branca என்னும் பெயரில் இடுகைகள் வெளியிடும் அந்த நபர், ப்ரஷாந்தின் மரணத்தை சுட்டிக்காட்டி, ‘கனடாவுக்குள் ஊடுருவிய மற்றொரு இந்தியர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
எட்டு மணி நேரம் நெஞ்சு வலியால் துடிதுடித்து உயிரிழந்த ப்ரஷாந்தின் மனைவி, அநாகரீகமாக நடந்துகொண்டதாக அவரிடம் கூறப்பட்டதாக எக்ஸில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அது குறித்து விமர்சித்துள்ள Andrew Branca, ’அவளும் அவளது கணவரும் பேசாமல் இந்தியாவிலேயே இருந்திருந்தால் கனடாவின் சுகாதார அமைப்பின் மோசமான அனுபவத்தை தவிர்த்திருக்கலாம்’ என்று கூறியதுடன், இந்திய சுகாதார அமைப்பையும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
Andrew Brancaவின் இடுகைக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
புலம்பெயர்தலுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதற்கு ஒருவரின் மரணத்தை Andrew Branca தவறாக பயன்படுத்திக்கொண்டுள்ளதாகவும், அவர் கொஞ்சமாவது மனிதத்தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டும் என்னும் ரீதியிலும் பலரும் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.