தொலைக்காட்சித் தொடராகியுள்ள இளம்பெண் கொலை வழக்கு: சம்பந்தப்பட்ட இளம்பெண் கூறும் விடயம்
கனடாவை உலுக்கிய இந்திய வம்சாவளி இளம்பெண் கொலை வழக்கு ஒன்று தொலைக்காட்சித் தொடராக வெளிவந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்த இளம்பெண்ணைக் கொலை செய்த பெண், அந்த தொடர் குறித்து ஒரு விடயத்தைக் கூறியுள்ளார்.
1997ஆம் ஆண்டு, இந்திய வம்சாவளியினரான ரீனா விர்க் (Reena Virk) என்னும் இளம்பெண், ஒரு கூட்டம் பதின்மவயதுப் பெண்கள் மற்றும் ஒரு பையனால் கொல்லப்பட்டார்.
ரீனாவின் தந்தையான Manjit Virk இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர், தாய் Suman Virk, இந்திய கனேடியர். தன் தோற்றம் குறித்து சுயபச்சாதாபம் கொண்ட ரீனா, சக மாணவ மாணவிகளால் தொடர்ந்து வம்புக்கிழுக்கப்பட்டார்.
1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி ரீனா மாயமானார். நவம்பர் மாதம் 22ஆம் திகதி, அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. ரீனா கொலை தொடர்பில் Nicole Cook, Nicole Patterson, Missy Grace Pleich, Courtney Keith, Gail Ooms, Kelly Marie Ellard என்னும் ஆறு பதின்மவயது பெண்களும், Warren Glowatski என்னும் பையனும் கைது செய்யப்பட்டார்கள்.
இதில், நிக்கோல் என்னும் பெண், ரீனாவின் நெற்றியில் சிகரெட்டால் சுட்டு, அவரை காலால் மிதிக்க, அதற்குப் பிறகுதான் மற்றவர்கள் அவரை மிருகத்தனமாக தாக்கியுள்ளார்கள். கெல்லி என்னும் பெண்தான், ரீனாவின் தலையைத் தண்ணீருக்குள் அமிழ்த்திக் கொன்றிருக்கிறார்.
மகளின் மரணத்தைத் தொடர்ந்து சில ஆண்டுகளில் ரீனாவின் தாயான சுமனும் 2018ஆம் ஆண்டு மரணமடைந்துவிட்டார்.
ரீனாவின் கொலை வழக்கு, Under the Bridge என்னும் பெயரில் தொலைக்காட்சித் தொடராக வெளியாகிவருகிறது. இந்நிலையில், ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை என்னும் பழமொழிக்கேற்ப, ரீனாவைக் கொலை செய்த கெல்லி, அந்த தொடர் பயங்கரமானதாக இருப்பதாகவும், அதைப் பார்த்தால் ரீனாவின் குடும்பத்தினருக்கு பழைய நினைவுகள் மீண்டும் நினைவுக்கு வந்து அவர்களை அவை அதிர்ச்சிக்குள்ளாக்கக்கூடும் என்று கூறியுள்ளார்.
ரீனாவைக் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை பெற்று சிறையிலடைக்கப்பட்ட கெல்லிக்கு ஒரு நாள் ஜாமீன் மட்டும் வழங்கப்படுகிறது. அந்த தொலைக்காட்சித் தொடர், தாங்கள் எவ்வளவு பயங்கர குற்றத்தைச் செய்துள்ளோம் என்பதைக் காட்டுவதாக தற்போது தெரிவித்துள்ளார் கெல்லி.
என்றாலும், அவர் தற்போது வருந்துவதால், மகளை இழந்த ரீனாவின் குடும்பம் அடைந்த துயரம் எவ்விதத்திலும் குறையப்போவதில்லை என்பது மட்டும் உண்மை!