கனடாவில் இரட்டை கொலையுடன் தொடர்புடைய நபர் விமான நிலையத்தில் கைது
ஒன்டாரியோ மாகாணத்தின் கிரேட்டர் சட்பெரியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
26 வயதான ரொமைன் சாம் (Romaine Sam) என்பவர் அக்டோபர் 4ஆம் திகதி டொரோண்டோவிலுள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கியவுடன் கனடா எல்லை சேவை முகமை (CBSA) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் மீது இரண்டாம் நிலை கொலைக்கான இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி சட்பெரி நகரின் பாரிஸ் தெருவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டை கொலை சம்பவத்திற்குப் பிறகு ரொமைன் சாம் தெற்கு ஒன்டாரியோவுக்கு தப்பிச் சென்றது கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். தற்போது கனடாவுக்கு திரும்பியவுடன் பியர்சன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் நாடு கடத்தப்பட்டவர் அல்ல எனவும், அவர் எந்த நாட்டிலிருந்து வந்தார் என்பது விசாரணை நலனுக்காக வெளிப்படுத்தப்படமாட்டாது எனவும் போலீசார் தெரிவித்தனர்.
சட்பெரி போலீசார் சாமை பியர்சனில் காவலில் எடுத்துக்கொண்டு சட்பெரிக்கு திரும்பியுள்ளனர்.
இந்த இரட்டைக் கொலை தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.