அல்பெர்டாவில் ஆசிரியர் வேலைநிறுத்தம் இன்று தொடங்க வாய்ப்பு
கனடாவின் அல்பெர்டா மாகாண ஆசிரியர் சங்கத்தின் (Alberta Teachers’ Association – ATA) சுமார் 51,000 உறுப்பினர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தயாராக உள்ளனர்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டால், மொத்தம் 2,500க்கும் மேற்பட்ட பொது, பிரிக்கப்பட்ட மற்றும் பிரஞ்சு மொழிப் பள்ளிகளில் 7 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
எட்மண்டன், கால்கரி, ஃபோர்ட் மெக்மரே மற்றும் லெத்பிரிட்ஜ் உள்ளிட்ட பல கல்விக் குழுக்கள், இறுதி நேர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், திங்கட்கிழமை முதல் வகுப்புகள் நிறுத்தப்படும் என பெற்றோருக்கு அறிவிப்பு அனுப்பியுள்ளன.
கடந்த வாரம் இரு தரப்பினரிடையேயான பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடின்றி முடிவடைந்திருந்தன.
அரசாங்கம் கடந்த மாதம் முன்வைத்த நான்கு ஆண்டுகளில் 12% சம்பள உயர்வு, வகுப்பறை அளவை சமன்படுத்த 3,000 புதிய ஆசிரியர்களை நியமிக்கும் வாக்குறுதி மற்றும் கோவிட்19 தடுப்பூசி செலவுக்கான நிதி உள்ளிட்ட அண்மைய சலுகையை ஆசிரியர்கள் நிராகரித்திருந்தனர்.
அரசாங்கம் முன்வைத்த 3,000 நியமனங்கள் போதுமானவை அல்ல. மாணவர்–ஆசிரியர் விகிதத்தை சமப்படுத்த மாகாணத்துக்கு குறைந்தது 5,000 புதிய ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் ஆசிரியர்கள் தெரிவித்துளள்னர்.
அரசாங்கம் மற்றும் ஆசிரியர் சங்கம் இடையே இன்று இறுதி நிமிட பேச்சுவார்த்தைகள் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.