பிரித்தானிய பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை அளித்த கொலைகார நர்ஸ்: வெளியான புதிய தகவல்
பிரிட்டனின் செஸ்டர் பகுதி மருத்துவமனையில் 7 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நர்ஸ் இன்று நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார்.
செஸ்டர் பகுதியை சேர்ந்த லூசி லெட்பி என்ற நர்ஸ், ஜூன் 2015 மற்றும் ஜூன் 2016 க்கு இடையில் மேலும் 10 குழந்தைகளை கொலை செய்ய முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
செஸ்டர் மருத்துவமனையில் பணியாற்றிய காலத்தில் இரு பெண் குழந்தைகள் உட்பட ஏழு பச்சிளம் குழந்தைகளை அவர் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் லூசி லெட்பி மறுத்துள்ளார். மேலும், கொல்லப்பட்ட 7 குழந்தைகள் உட்பட அவரிடம் இருந்து தப்பிய அனைத்து குழந்தைகளின் அடையாளங்களையும் சட்ட காரணங்களால் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் தகவல்களும் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை ஆறு மாதங்கள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.