அமெரிக்காவின் ஒவ்வொரு குழந்தைக்கும் 2 SpaceX பங்குகள் இலவசம்; எலான் மஸ்க் அறிவிப்பு
அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தலா இரண்டு SpaceX பங்குகளை இலவசமாக வழங்கவுள்ளதாக உலகின் மிகப் பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
சுமார் 18 பில்லியன் டொலர் மதிப்புள்ள இந்தத் திட்டம், தொழில்நுட்பத் துறை மீது எழுந்துள்ள அரசியல் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தனது செயற்கைக்கோள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) வணிகங்களுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

விண்வெளியில் தரவு மையங்களை (Data Centres) அமைப்பதற்காக 1 மில்லியன் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த SpaceX நிறுவனத்திற்கு அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) ஒப்புதல் அளித்த சில மணி நேரங்களிலேயே, புதன்கிழமை மாலை மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதிகரித்து வரும் AI கணினித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தச் செயற்கைக்கோள் கூட்டமைப்பு உதவும் என FCC தெரிவித்துள்ளது.
கணினி உள்கட்டமைப்புகளின் அதிவேக வளர்ச்சி சுற்றுச்சூழல் பாதிப்புகளையும், தொழில்நுட்ப கோடீஸ்வரர்களின் அரசியல் செல்வாக்கையும் அதிகரிப்பதாகப் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அண்மையில் நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தலிலும், தரவு மையங்களின் விரிவாக்கத்தை எதிர்த்தவர்களே ஜனநாயகக் கட்சியின் முக்கிய வெற்றியாளர்களாக உருவெடுத்தனர்.
இத்தகைய சூழலில், குழந்தைகளுக்கு நேரடிப் பொருளாதாரப் பங்கை வழங்குவதன் மூலம் AI மற்றும் விண்வெளிப் பொருளாதாரத்தில் பொதுமக்களின் பங்கேற்பையும் ஆதரவையும் விரிவுபடுத்த முடியும் என சிங்கப்பூர் OCBC நிறுவனத்தின் ஆலோசனைத் தலைவர் செஸ் அன்பு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, FCC-ன் இந்த முடிவுக்கு அமெரிக்க வானியல் சங்கம் (American Astronomical Society) கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
1 மில்லியன் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்துவது, பல தசாப்தங்களாக வானியல் ஆய்வு வசதிகளில் செய்யப்பட்ட அரசாங்க முதலீடுகளைப் பலவீனப்படுத்தும் என்றும், இரவு வானத்தை ஆய்வு செய்யும் பணிகளுக்குப் பெரும் இடையூறாக அமையும் என்றும் வானியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.