சுட்டுக் கொல்லப்படலாம்... மியான்மரில் பிணைக் கைதிகளாக சிக்கிய இந்தியர்கள்
கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் இந்தியாவிலிருந்து வேலைக்காக தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட 300 பேர் தற்போது மியான்மரில் பிணைக் கைதிகளாக சிக்கியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த நபர்களை கும்பல் ஒன்று தாய்லாந்திலிருந்து மியான்மருக்கு கடத்திச் சென்று சைபர் குற்றங்களில் ஈடுபட வற்புறுத்துவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், அவர்கள் வெளியிட்ட காணொளியில், ஊழியர்களை மிரட்டி சைபர் குற்றங்களில் ஈடுபட வற்புறுத்துகின்றனர். தினமும் 16 மணி நேர வேலை பார்ப்பதுடன், உரிய உணவு கிடைக்காமல் மிகவும் சோர்வடைந்த நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போதுள்ள பகுதியில் இருந்து தப்பிக்க நினைப்பவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு அவர்களது உடல் கடவுச்சீட்டுடன் தாய்லாந்து எல்லையில் வீசப்படும் என்று கடத்தல்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
24 மணி நேரமும் துப்பாக்கி முனையில் இருப்பதால் சுட்டுக் கொல்லப்பட வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
இதனால் மிக விரைவில் தங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் இந்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.