ஆபிரிக்க நாட்டில் பரவும் மர்ம நோய்: அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை
வடக்கு ஆபிரிக்க நாடான தெற்கு சுடானில் மர்ம நோய் பரவலுக்கு இதுவரை 89 பேர்கள் இறந்துள்ள நிலையில் உலக சுகாதார அமைப்பின் சிறப்புக்குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு ஆபிரிக்காவில் சமீபத்தில் கொரோனா புதிய மாறுபாடான ஓமிக்ரான் அடையாளம் காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது தெற்கு சூடான் நாட்டில் மர்ம நோய் பரவுவதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் உறுதி செய்துள்ளார்.
Jonglei மாகாணத்தின் Fangak நகரில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்டுள்ள இந்த மர்ம நோய்க்கு பல எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாகும் Fangak. தற்போது ஏற்பட்டுள்ள மர்ம நோய் தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் சிறப்பு குழுவினர் மாதிரிகளை சேகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.
இதுவரை 89 பேர்கள் மரணமடைந்துள்ளதை உறுதி செய்துள்ள உலக சுகாதார அமைப்பின் சிறப்பு குழுவினர், பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மாதிரிகளை சேகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர். தண்ணீரில் எண்ணெய் கலந்து காணப்படுவதால் கால்நடைகள் பெரும்பாலானவை செத்து மடிவதாகவும் தெரிய வந்துள்ளது.
தெற்கு சூடானின் வடபகுதியில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால் எஞ்சிய பகுதிகள் துண்டிக்கப்பட, அத்தியாவசிய பொருட்களுடன் உணவுக்கும் தட்டுப்பட்டு ஏற்பட்டுள்ளது.
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத மோசமான வெள்ளத்தால் 700,000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது உணவுக்கு அல்லல்படும் நிலையில், மர்ம நோயும் அங்குள்ள மக்களை வதைத்து வருவதாக தெரிய வந்துள்ளது.