கனடாவில் கார் கொள்ளையுடன் தொடர்புடைய இளைஞர் கைது
கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாகப் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கனடிய அரச காவல்துறை கைது செய்துள்ளது.
நிக்கோலஸ் கெல்லி என்ற இந்த நபரை ரிச்சிபுக்டோ பகுதியில் பொலிஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். அவர் கடைசியாக ஆகஸ்ட் 4 ஆம் திகதி கென்ட் கவுண்டியில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட 25 வயதான நிக்கோலஸ் கெல்லி மீது, ஆட்களைத் தாக்குதல், ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் வாகனம் ஓட்டுதல், வாகனத் திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேகநபர் எந்த இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என்ற விவரங்களைப் பொலிஸார் வெளியிடவில்லை.
எனினும், சந்தேகநபரைப் பிடிப்பதற்குத் தேவையான தகவல்களை வழங்கி உதவிய பொதுமக்களுக்குச் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் பொலிஸார் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.