உலகை உலுக்கிய பேரழிவு; உடல்களை அடக்கம் செய்யவுள்ளதாக நேபாள அரசு அறிவிப்பு!
நேபாள வெள்ளத்தில் பலியாகி இதுவரை அடையாளம் கண்டறியபடாத நபர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.
திபெத் எல்லையில் அமைந்துள்ள நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில், கடந்த 26 ஆம் திகதி திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டதில் 600 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததுடன் 2000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

600 க்கும் மேற்பட்ட உயிரிழப்பு
காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் இன்று (29) காலை 10 மணி நிலவரப்படி 626 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதிகப்படியாக சித்வான் பகுதியில் மட்டும் 233 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மீட்கப்படும் உடல்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு சித்வான் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் போதிய இடவசதியும் கட்டமைப்பு வசதியும் இல்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், மீட்கப்பட்டு வரும் உடல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், உடல்கள் சிதைவடைவதைத் தடுப்பது மிகுந்த சிரமம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனால், சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டு புதிய தொற்றுகள் உருவாகக் கூடும் என்பதால் அடையாளம் காணப்படாத உடல்களை தேவ்காட் பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் அடக்கம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.