நேபாள வெள்ள அனர்த்தம் ; 900ஐ கடந்த பலி எண்ணிக்கை
நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939-ஆக அதிகரித்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கி மாயமானோரின் எண்ணிக்கை 2,500-இல் 4,250-ஆக உயா்ந்துள்ளது.

திபெத்-நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது.
சகதியுடன் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீா்மின் நிலையங்கள், இதர உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.
ரசுவா, நுவாகோட், சித்வன், நவல்பராசி, கோா்கா, தனாஹு ஆகிய மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளைப் புரட்டிப் போட்ட இந்தப் பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 939-ஆக உயா்ந்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கி 85 பாதுகாப்பு அதிகாரிகள், 320 வெளிநாட்டவா் உள்பட 4,250 போ் மாயமாகினா்.
உத்தர பிரதேச மாநிலம், மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கண்டக் ஆற்றில் அடையாளம் தெரியாத 3 பெண்கள் மற்றும் ஓா் ஆணின் சடலங்கள் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து, 4 பேரின் உடல்களும் இரு ஆம்புலன்ஸுகள் மூலமாக நேபாள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக மகாராஜ்கஞ்ச் மாவட்ட நிா்வாகிகள் தெரிவித்தனா்.