கனடாவில் குதிரைகளுக்கு வைரஸ் பாதிப்பு அபாயம்!
கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் உள்ள சசெக்ஸ் பகுதியில் நடைபெற்ற குதிரைக் கண்காட்சியில் வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், குதிரை உரிமையாளர்கள், வளர்ப்பாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்குச் சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிங்ஸ் கவுண்டி ஃபேர் நிகழ்வில் நடைபெற்ற '4-H ரவுண்ட் அப்' குதிரைக் கண்காட்சியில் கலந்துகொண்ட ஒரு குதிரை மூலம் வைரஸ் பரவியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கண்காட்சியில் பங்கேற்ற அந்தப் குறிப்பிட்ட குதிரை, சமீபத்தில் ஈக்வைன் ஹெர்பெஸ்வைரஸ் வகை 1 (EHV-1) தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றொரு குதிரையுடன் ஒரே பராமரிப்பு மையத்தில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

தொற்று உறுதிசெய்யப்பட்ட குதிரை நேரடியாகக் கண்காட்சியில் பங்கேற்கவில்லை என்றாலும், அதனுடன் தொடர்பில் இருந்த வேறு குதிரை பங்கேற்றதால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக மாகாணத் தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி நிக்கோல் வானமேக்கர் தெரிவித்துள்ளார். ஈக்வைன் ஹெர்பெஸ்வைரஸ் (EHV-1) என்பது குதிரைகளிடையே மிக வேகமாகப் பரவக்கூடிய ஒரு தீவிர தொற்றாகும்.
இது குதிரைகளுக்குச் சுவாசக் கோளாறுகள், நரம்பியல் நோய்கள் மற்றும் சினைப் பருவத்தில் இருக்கும் குதிரைகளுக்குக் கருச்சிதைவு போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.
கண்காட்சியில் பங்கேற்ற குதிரைகளை, மற்ற குதிரைகளிடமிருந்து 14 முதல் 21 நாட்கள் வரை தனியாகப் பிரித்து பராமரிக்க வேண்டும்.
குதிரைகளுக்குக் காய்ச்சல், தீவிர சோர்வு அல்லது பசியின்மை போன்ற அறிகுறிகள் உள்ளனவா என்பதைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும்.
குதிரைகளுக்கு 38.9 பாகை செல்சியஸ் அளவை விடக் கூடுதல் காய்ச்சல் அல்லது பிற நோய் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாகக் கால்நடை மருத்துவரைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.